போஜ்புரி திரையுலகின் முன்னணி நடிகை அஞ்சலி ராகவ், லக்னோவில் நடைபெற்ற ஒரு பட விழாவில் கலந்துகொண்ட போது நடந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா மேடையில் அஞ்சலி உரையாற்றிக்கொண்டிருந்த நேரத்தில், அருகில் நின்ற நடிகர் பவன்சிங் திடீரென அவரது இடுப்பை கிள்ளினார். இதை அஞ்சலி சிரிப்புடன் சமாளித்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
"அவர் கிள்ளியதை ரசித்ததாக சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். மேடையில் இருந்ததால் மட்டும் சிரித்தேன். எதற்காக அவர் எனது இடுப்பை தொட வேண்டும்? எந்த பெண்ணையும் அனுமதியின்றி தொடுவது தவறு. நான் அதை ஒருபோதும் ஏற்க மாட்டேன். இனி போஜ்புரி சினிமாவில் பணியாற்ற மாட்டேன்," என்கிறார் அஞ்சலி.
இந்த விவகாரம் பெரிய அளவில் பரவியதும், பவன்சிங் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அஞ்சலியின் முடிவை மாற்றிக்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. நடிகைகளுக்கு தேவையான மரியாதையும் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டிய அவசியம் இந்த சம்பவம் மூலம் தெரியவந்துள்ளது.
Listen News!