தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்த பின்னர் அவரைப் பற்றிய உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் முதலமைச்சர் விஜயை சந்தித்த சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சந்திப்பின் புகைப்படங்களை வெளியிட்டார். அதனுடன், விஜயின் திரைப்பயணத்திலிருந்து அரசியல் பயணத்திற்கு மாறிய துணிச்சலை பாராட்டியும் அவர் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், “இன்று சென்னை வந்தபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி இருந்தது. ஏனெனில் நமது முதலமைச்சரை சந்திக்கப் போகிறேன் என்ற எண்ணமே அந்த மகிழ்ச்சிக்கு காரணம். விஜய் சார் திரையில் மட்டும் ஒரு ஹீரோவாக இருப்பதற்காக பிறந்தவர் அல்ல என்று நான் எப்போதும் நினைத்திருக்கிறேன்.
அவருடைய ஆற்றல், மக்களை ஈர்க்கும் தன்மை மற்றும் அவருக்குக் கிடைக்கும் வரவேற்பு ஆகியவை அவர் இன்னும் பெரிய பொறுப்புக்காக உருவாக்கப்பட்டவர் என்பதை உணர்த்தியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏற்கனவே வெற்றிகரமாக சாதித்த ஒரு துறையை விட்டு விலகி, முற்றிலும் புதிய துறையில் காலடி எடுப்பதற்கு மிகுந்த துணிச்சல் தேவைப்படுகின்றது என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.
“எளிதான பாதையை தேர்வு செய்யாமல், மக்களுக்காக ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் புதிய சவாலை ஏற்றுக்கொள்வது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அனைவருக்கும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் அந்த அழைப்பை ஏற்று செயல்படுவது மிகச் சிலரே என்றும் சமந்தா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

விஜயின் தலைமையின்மீது நம்பிக்கை தெரிவித்த சமந்தா, “ஏற்கனவே அவரை நம்புபவர்களுக்குக் கூட விஜய் சார் ஆச்சரியத்தை கொடுப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் வகிக்கும் பதவியால் அல்ல, அந்தப் பொறுப்பை அணுகும் நோக்கத்தினால்தான் அது சாத்தியமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, விஜய்க்கு வலிமை, ஞானம் மற்றும் உறுதியான மனநிலையை வாழ்த்திய சமந்தா, இளைஞர்களும் தங்களது ஆரம்ப கனவுகளைத் தாண்டி பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஊக்கமளிக்கும் கருத்தையும் பகிர்ந்துள்ளார்.
சமந்தாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விஜயின் அரசியல் பயணத்திற்கு திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!