தென்னிந்திய திரைத்துறையில் முக்கியமான அமைப்பாக இருப்பது தென்னிந்திய நடிகர் சங்கம். அத்தகைய நடிகர் சங்கத்தில் தற்பொழுது புதிய சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த புதிய சர்ச்சையின் மையத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர்களின் பதவிக்கால நீடிப்புக்கு எதிராக நடிகர் சங்க உறுப்பினர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் பதவியில் இருக்கும் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து கொண்டுள்ளனர். இந்த முடிவு சட்டவிரோதமானது என்றும், சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் எதிரானது என்றும் கூறியுள்ள நம்பிராஜன் என்ற உறுப்பினர், “தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவேண்டும்” எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணையில் உள்ளது. இதில், மனுதாரரின் தரப்பு வாதம் என்னவெனில், சங்கத்தின் சட்டத்தின் படி நிர்வாகிகளின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இந்தக் காலத்தை தேர்தல் நடக்காமல் நீட்டிக்க முடியாது. எனவே தற்போது பதவியில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக பதவியை நீடிக்கின்றனர்.
அதனால், புதிய தேர்தலுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடவும், தற்போதைய நிர்வாகிகள் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கக் கூடாதெனவும் தடை உத்தரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு ஜூன் 4ம் திகதிக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Listen News!