பான் இந்தியா இசை அமைப்பாளராக வலம் வருகிற அனிருத் ரவிச்சந்தர் தற்போது ஒரு புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். இசை உலகில் மட்டுமல்லாது, ரசிகர்கள் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள அனிருத், "Hukum " என்ற டைட்டிலில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார்.
இவரது நிகழ்ச்சிகள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த அவரது நேரடி இசை நிகழ்ச்சி தற்போது சட்ட சிக்கலில் சிக்கி உள்ளது.
அனிருத் தனது 'Hukum' இசை நிகழ்ச்சியை கடந்த ஜூலை 26ம் தேதி, சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதுகாப்பு மற்றும் இட நிர்வாக காரணங்களால், இந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதனையடுத்து, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அனிருத் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்துவதாகவும், விரைவில் புதிய தேதி மற்றும் இடம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு மாற்றாக, ஆகஸ்ட் 23ம் தேதி, அதே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கூவத்தூரில் உள்ள 'மார்க் சொர்ணபூமி' என்னும் இடத்தில் புதிய இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இது ரசிகர்களிடையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. டிக்கெட் விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது அதிலும் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 22), மாநில சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தரப்பில், வழக்கறிஞர் திருமூர்த்தி மூலமாக, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் ஒரு முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, அனிருத் இசை நிகழ்ச்சி மார்க் சொர்ணபூமியில் நடத்தப்பட இருப்பது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் திட்டமிடப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் அமைதியாக இருக்கும் இடமாக காணப்படுகிறது. ஆனால் இந்நிகழ்ச்சி நடைபெற்றால் வாகன நெரிசல், சத்தம், பொதுமக்களுக்கு இடையூறு ஆகியவையும் ஏற்படக்கூடும். எனவே, இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தற்பொழுது கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. நீதிபதி எந்த முடிவை எடுப்பார் என்பதே ரசிகர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Listen News!