தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கியவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். சினிமாவிற்கு வந்த முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். குறிப்பாக, 'ஜெய் பீம்' படத்தில் இவர் நடித்த கதாப்பாத்திரம் தமிழக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து, இவர் தேர்ந்தெடுத்த சிறந்த கதைகளும், உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வரும் நடிப்பும் அவரை பிரத்தியேகமாக பிரபலமாக்கின. சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற 'பொன்மேன்' திரைப்படத்திலும் இவரது கதாப்பாத்திரம் பாராட்டைப் பெற்றது.
இந் நிலையில், தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை பொதுவாகச் சொல்ல மாட்டேன் என்று அடிக்கடி தெரிவிக்கும் லிஜோமோல் ஜோஸ், சமீபத்திய ஒரு நேர்காணலில் தனது சிறுவயது அனுபவங்களையும், அம்மாவின் மறுமணம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனவலி குறித்தும் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
லிஜோமோல் கூறியதாவது, "நான் ஒன்றரை வயதில் இருக்கும் போதே என் அப்பா இறந்துவிட்டார். அந்த நேரத்தில் என்னுடைய அம்மா மிகவும் இளையவள். நாங்கள் இருவரும் மட்டுமே இருந்தோம். திடீரென அம்மா மறுமணம் செய்துகொண்டார். அந்த நிகழ்வு எனக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்தது." என்றார்.
இளம் வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் புதிய வாழ்க்கையை ஏற்க முடியாமல் தவித்த அந்த சிறுமியின் மனநிலை மிகவும் சோகமாக இருந்ததென்றே கூற வேண்டும். தாயின் அடுத்த கட்ட வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாமல், மனதில் குழப்பம், அழுத்தம், நம்பிக்கையின்மை போன்றவை வளரத் தொடங்கியதாகவும் லிஜோமோல் கூறியுள்ளார்.
தொடர்ந்து, "அம்மா மறுமணம் செய்ததுக்குப் பிறகு, புதிதாக வந்த ஒருவரை தந்தையாக ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. இரவெல்லாம் தூக்கம் வராது. நான் பெரும்பாலான நாட்கள் என்னுடைய அத்தை வீட்டில்தான் தூங்குவேன். அம்மா அருகில் தூங்கியதே இல்லை. இதெல்லாம் எனது மனநிலையை பாதித்துக் கொண்டிருந்தன." எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், "அந்த காலக்கட்டத்தில் நான் என் அம்மாவை விட்டுவிட்டேன். அவருடைய செயல்கள் மீது கோபம் இருந்தது. சிறிது காலத்தில் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அம்மாவும், அவருடைய கணவரும் எனக்காகக் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. என்னை மட்டும் வளர்த்து வந்தார்கள். அது அவர்களின் பெரிய தியாகம்." என்றார் லிஜோமோல்.
அதனைத் தொடர்ந்து, "அவர் எங்கள் குடும்பத்தில் வந்த பிறகு, நம் வாழ்க்கை நல்லபடியாக மாறியது. அவருடைய அன்பும், பொறுமையும், என் மீது வைத்த அக்கறையும் என்னை மெதுவாக மாற்றியது. இப்போது அவர்கள் இருவரும் எனக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்." எனவும் தெரிவித்திருந்தார்.
Listen News!