தமிழ் சினிமா இன்று புதிய பரிமாணங்களைக் கண்டுவருகின்றது. காமெடி நடிகர்களாகத் தொடங்கிய பலரும், கதாநாயகர்களாக மாறி வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில், இப்போது ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகராக சூரி விளங்குகின்றார்.
அவர் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மாமன்’, மே 16ம் திகதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ‘விலங்கு’ வெப்சீரிஸ் மூலம் மக்களைக் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படம், குடும்ப உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் சார்ந்த படமாக வெளிவந்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பாரம்பரிய குடும்ப வாழ்க்கையின் வெண்முரசாக இந்த திரைப்படம் அமைந்துள்ளதோடு, பாசம், பிரிவு, நகைச்சுவை மற்றும் நெஞ்சை நெகிழச் செய்யும் பல தருணங்கள் கொண்டதாக அமைந்துள்ளது.
முன்னதாக காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சூரி, "சிறப்பான கதாநாயகன்" என்ற வகையில் இந்தப் படத்தில் தோன்றியுள்ளார். திரைப்பட வெளியீட்டைத் தொடர்ந்து, சூரி தமிழகத்தின் பல பகுதிகளில் செய்தியாளர்களை சந்தித்து படம் பற்றிய தனது உணர்வுகளைப் பகிர்ந்து வருகின்றார். அதில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் உருக்கமாக பேசியுள்ளார்.
அதன்போது அவர் கூறியதாவது, “படத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பம், குடும்பமாக வந்து படத்தைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு உண்மையான வெற்றி.” என்றார்.
சூரி தொடர்ந்து பேசும்போது, “இன்றைக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஒரு சூரியாக இருக்கிறேன். கதைநாயகனாக என்னை வெற்றி அடைய செய்துவிட்டீர்கள். நானும் எப்போதும் உங்களில் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன். அதேபோல் உங்களில் ஒரு ஹீரோவாகவும் இருக்க ஆசைப்படுகிறேன். மேலும் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தால் அதிலும் நடிப்பேன்.” எனவும் கூறியிருந்தார்.
Listen News!