இந்திய திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ராமாயணம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி, சீதையாக நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விழாவில் உரையாற்றிய சாய் பல்லவி, "சீதையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். இது ஒரு சாதாரண கதாபாத்திரம் அல்ல; பல கோடி மக்களின் நம்பிக்கை, பக்தி மற்றும் உணர்வுகளுடன் இணைந்த ஒரு தெய்வீக பாத்திரம். அந்தப் பொறுப்பை உணர்ந்தபடியே இந்த கதாபாத்திரத்தில் நடித்தேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், எதிர்கால சந்ததியினரும் ரசித்து புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இந்த 'ராமாயணம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சீதையின் அமைதி, தியாகம், கருணை, உறுதி போன்ற குணநலன்களை இயல்பாக வெளிப்படுத்துவதற்காக, படப்பிடிப்பு காலத்தில் தியானம் செய்து மனதளவில் அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போனதாகவும் சாய் பல்லவி பகிர்ந்துகொண்டார்.

அதேநேரம், இந்த திரைப்படம் உருவாகும் பின்னணியில் படக்குழுவினர் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு காட்சியும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் படம் இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணராகவும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர் என்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் முதல் பாகம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளதுடன், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவிய படைப்புகளில் ஒன்றாக அமையும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்
Listen News!