• Jul 20 2026

பாக்யராஜ் பெயர் இனி நிரந்தரம்... நெகிழ்ச்சியில் பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான கே. பாக்யராஜின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அவருக்கு மேலும் ஒரு உயரிய அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த பாக்யராஜுக்கு வயது 73. அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றன. இறுதிவரை அவரது குடும்பத்தினருடன் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டவர்களில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனும் ஒருவர்.

பாக்யராஜின் மறைவுக்குப் பிறகு பல்வேறு நேர்காணல்களில் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்திருந்த பார்த்திபன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிரந்தர கவுரவத் தலைவராக பாக்யராஜை அறிவிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


அதில், பாக்யராஜைப் பற்றி தான் அளித்த பேட்டிகளில், ஒரு நபர் கூறிய மனிதாபிமானமற்ற கருத்து குறித்து பெயர் குறிப்பிடாமல் பேசியதாகவும், ஆனால் அதனை தவறாகப் புரிந்துகொண்ட சிலர் இயக்குநர்கள் பாண்டியராஜன் மற்றும் ஆர். சுந்தரராஜன் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டதை அறிந்து வருத்தமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நபரின் பெயர் யாருக்கும் தெரியாமல் போகட்டும் என்றும், அவரைப் பற்றிய கசப்பான நினைவுகளும் தன் மனதில் இருந்து மறைந்துவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், மகிழ்ச்சியான செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கே. பாக்யராஜை சங்கத்தின் 'நிரந்தர கவுரவத் தலைவராக' அறிவிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்ததாகவும், அந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனுடன், சங்கத்திற்காக புதிதாக எழுப்பப்படும் கட்டடத்திற்கும் 'கே. பாக்யராஜ்' பெயர் சூட்டப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். தனது குருவுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதை தன்னை மிகுந்த மகிழ்ச்சியடையச் செய்ததாகவும், சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பார்த்திபன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

திரைக்கதை எழுத்து, இயக்கம் மற்றும் நடிப்பு என தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பாக்யராஜின் பெயர், இனி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் வரலாற்றிலும் நிரந்தரமாக இடம்பிடிக்கவுள்ளது.

Advertisement

Advertisement