• Jun 12 2026

பாரதிராஜாவின் இறுதி ஆசை இதுதானா? சொந்த மண்ணில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை கிராமத்து மண்வாசனையால் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா, தனது பிறந்த மண்ணிலேயே இறுதி உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார். அவரது மறைவு திரைத்துறையை மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதையும் கனக்கச் செய்துள்ளது.

84 வயதான பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்தார். கடந்த ஆண்டு மகன் மனோஜின் மறைவு அவரை மனதளவில் பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது.

அவரது உடல் முதலில் சென்னை நீலாங்கரையில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அவரது விருப்பத்திற்கிணங்க சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோடு பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மாலை நேரத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. காவல்துறையினரின் அணிவகுப்பு, இசை மரியாதை மற்றும் 72 குண்டுகள் முழங்க வழங்கப்பட்ட அரசு அஞ்சலிக்குப் பிறகு, அவரது உடல் பண்ணை வீட்டிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கிராமிய வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் தனது படைப்புகள் மூலம் தலைமுறைகள் கடந்தும் உயிர்ப்புடன் வைத்திருந்த பாரதிராஜா, இன்று உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும், அவரது திரைப்படங்களும் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும் தமிழ் மக்களின் நினைவில் என்றென்றும் வாழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement

Advertisement