தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்ச்சிப்பூர்வ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அனுபமா, பின்னர் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், தனது வாழ்க்கையின் புதிய கட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சில நேரங்களில் மன அமைதியை அடைய பல தடைகளை கடக்க வேண்டியிருக்கும். இன்று அந்த அமைதி என்னை வந்தடைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இன்றிலிருந்து என் குரலையும், என் வாழ்க்கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை; எந்த பயமும் இல்லை. நான் எனக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளேன். கிட்டத்தட்ட மறந்துபோன என் வாழ்க்கையை மீண்டும் நேசிக்க ஆரம்பித்துள்ளேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக மனதில் இருந்த சில உணர்வுகளை இப்போது வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், எப்போதும் தமக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும், தனது வாழ்க்கைப் பயணத்தில் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
"இது என் குணமடையும் பயணத்தின் தொடக்கம்... சுதந்திரத்திற்கான தொடக்கம்... முக்கியமாக, எனக்கான வாழ்க்கையை நான் தேர்ந்தெடுக்கும் புதிய அத்தியாயம்" என்று தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரனின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!