தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் தடைகளைத் தாண்டி நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதுடன், அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் விஜய், தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நடித்த முதல் திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். அதனால் படம் தொடங்கும் முன் திரையில் தோன்றிய "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்" என்ற சிறப்பு டைட்டில் கார்டு, ரசிகர்களிடையே மிகப்பெரிய கைதட்டலையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

மேலும், இது விஜய்யின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதால், திரையரங்குகள் பல இடங்களில் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களுக்கும் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கும் சாட்சியாக அமைந்துள்ளன. சமூக வலைத்தளங்களிலும் #OneLastDance என்ற ஹேஷ்டேக் வேகமாக பரவி, ரசிகர்கள் தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், திரைப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் விஜய்க்கும் படக்குழுவிற்கும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரவிமோகன், தனது வாழ்த்து பதிவில், "வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே நீங்கள் உண்மையான 'ஜனநாயகன்' ஆகிவிட்டீர்கள். எங்களுக்குப் பிடித்த நடிகராக உங்கள் எளிமையும் கண்ணியமும் இந்தப் படத்தின் மூலம் கொண்டாடப்படுகிறது. எங்கள் அன்பிற்குரிய முதலமைச்சர் அண்ணாவுக்கு வாழ்த்துகள்; இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று என்றும் நினைவில் நிற்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிபி சத்யராஜ், "திரையில் உங்களை மிகவும் மிஸ் செய்வோம் விஜய் அண்ணா. 'ஜனநாயகன்' ஆரம்பம் முதல் முடிவு வரை மாஸ் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். உங்கள் ஸ்டைல், ஸ்வாக், திரை ஆளுமை மற்றும் நடிப்பு அனைத்தும் வேறு நிலை. ரசிகர்களுக்கு இத்தனை ஆண்டுகள் மறக்க முடியாத தருணங்களை வழங்கியதற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த், "இது வெறும் திரைப்பட வெளியீடு அல்ல; வரலாற்றில் இடம்பிடிக்கும் தருணம். என் அன்புச் சகோதரரும் தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், 'ஜனநாயகன்' படக்குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு புறம் ரசிகர்களுக்கு இறுதி திரைப்பட விருந்தையும், மறுபுறம் மக்கள் சேவையில் புதிய அத்தியாயத்தையும் தொடங்கியிருப்பது ஊக்கமளிக்கும் செயல்" என்று பாராட்டியுள்ளார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது பதிவில், "அந்த கடைசி சில நொடிகள்... தலைவா, திரையில் உங்களை மிஸ் பண்ணுவேன். எல்லாவற்றிற்கும் நன்றி" என்று உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் திரைப்பயணத்திற்கு நிறைவுக் கட்டமாக அமைந்துள்ள 'ஜனநாயகன்', ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களையும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளதுடன், திரையிலும் அரசியலிலும் விஜய்யின் புதிய அத்தியாயத்தை ஒரே நேரத்தில் கொண்டாடும் திரைப்படமாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!