தளபதி விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கும் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இது விஜய்யின் கடைசி திரைப்படமாக இருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போது தனது அரசியல் பயணத்தையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிற விஜய், சமீபத்தில் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். அதனைத் தொடர்ந்து, மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜனநாயகன் படத்தில் கடுமையான அரசியல் வசனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சமீப காலமாகவே விஜய் தனது பேச்சுகளில் எதிர்க்கட்சிகளை நேரடியாக விமர்சித்து வருகிறார். இதுவே படத்தின் காட்சிகளிலும் பிரதிபலிக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் சில முக்கிய காட்சிகள், தமிழில் விஜய்க்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அந்த படத்தில் நடிகர் நரேன் அமைச்சராக நடித்திருந்ததை போல, இங்கு பிரகாஷ்ராஜ் அதே வகை வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற “நான் ஆணையிட்டால்” பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான போஸ்டரில் சாட்டையுடன் விஜய் தோன்றுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனநாயகன் விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் பயணத்திற்கு ஒரு சக்திவாய்ந்த முடிவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!