இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தேனி மாவட்டம் காட்ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நடிகை ராதிகா மற்றும் அவரது தங்கை நிரோஷா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திரையுலகின் பல முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று காலை பெப்சி அமைப்பின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நடிகை ராதிகாவும் அவரது தங்கை நிரோஷாவும் பண்ணை வீட்டிற்கு வந்து பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

அதுமட்டுமல்லாமல், பாரதிராஜாவின் மகள் ஜனனியுடன் சேர்ந்து அவரது நல்லடக்கம் நடைபெறவுள்ள இடத்திற்கும் சென்று அங்குள்ள ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ராதிகாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா என்பதால், அவரை தனது குருவாகவும் தந்தை போன்றவராகவும் கருதி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பாரதிராஜாவின் இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை அவரது குடும்பத்தினருடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளிலும் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, அவரால் உருவாக்கப்பட்ட பல கலைஞர்களின் வாழ்க்கையிலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக திரையுலகினர் உருக்கத்துடன் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
Listen News!