தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், “இயக்குனர் இமயம்” என அழைக்கப்பட்டவருமான பாரதிராஜா (84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
“என் இனிய தமிழ் மக்களே… உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்” என்ற அவரது தனித்துவமான குரல் இன்று நினைவாக மட்டுமே மிஞ்சியிருப்பது ரசிகர்களை ஆழமாக பாதித்துள்ளது.
அவரது மறைவைத் தொடர்ந்து, திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல், இறுதி நிகழ்வுகளுக்காக சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு மாலை 4 மணியளவில் இறுதிச்சடங்கு தொடங்கப்பட்ட நிலையில், காவல்துறையின் மரியாதையுடன் பேண்ட் வாத்திய இசை ஒலிக்க, அணிவகுப்புடன் உடல் அடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த தருணம் தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல், தமிழ்ச் சமூகத்திற்கே ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இயக்குனர் இமயத்தின் பங்களிப்புகள், அவரது படைப்புகள் மற்றும் சமூக பார்வை என்றும் தலைமுறைகள் கடந்து பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழர்கள் பெற்ற புதையலைக் குழிதோண்டி புதைத்துவிட்டோம்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அவருடைய எக்ஸ் தள பதிவு வருமாறு,
பிறந்த மண்ணில்
அடக்கம் செய்யப்பட்டார்
பாரதிராஜா
83 ஆண்டுகளுக்கு முன்னே
தமிழர்கள் பெற்ற
ஒரு புதையலைக்
குழிதோண்டி மீண்டும்
புதைத்துவிட்டோம் பூமிக்குள்
மேற்குத்தொடர்ச்சி மலைகளே
கள்ளிக்காடே கரடே நதியே
பச்சைத் தாவரங்களே
பாடும் பறவைகளே
வைகை அணைமீது மோதும்
வருசநாட்டுக் காற்றே… pic.twitter.com/j7bSUWKZs1
Listen News!