தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் வெற்றிமாறன், தனுஷுடன் இணைந்து 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'அசுரன்' போன்ற திரைப்படங்களை இயக்கி தேசிய விருதுகள் பெற்றவர். இந்திய திரை உலகில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள அவர், தற்பொழுது ஒரு தயாரிப்பாளராகவும் செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில், வெற்றிமாறன் தயாரித்த ‘Bad Girl’ படம் நீண்ட காலமாக வெளியீட்டை எதிர்நோக்கி வந்தது. இயக்குநர் வர்ஷா பரத் இயக்கிய இந்த திரைப்படம், பெண்ணின் சுதந்திரம் மற்றும் கலாச்சார கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் பார்வையை முன்வைத்து உருவாக்கப்பட்டது. சென்சார் போர்டு பல காட்சிகளை மாற்றுமாறு கூறியதனால், நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நீதிபதியின் பரிந்துரைகளை பின்பற்றி சில மாற்றங்களை செய்த பின் நேற்று படம் வெளியானது.
படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் வெறும் ஏழு லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. குறைந்தபட்சம் 10 கோடிக்கு மேல் செலவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இப்படத்தின் வசூலைக் கணக்கிட்டு பார்க்கும்போது, இது வெற்றிப் படம் ஆகுமா என்ற கேள்வி எழுகிறது.
இதற்கிடையில், ‘Bad Girl’ செய்தியாளர் சந்திப்பில் வெற்றிமாறன், "இனிமேல் படங்களை தயாரிக்கப்போவதில்லை. எனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறேன்," என்று உருக்கமாக தெரிவித்தார். மேலும், இன்னொரு தயாரிப்பு முயற்சி ‘மனுஷி’ என்ற படம் சென்சாரில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது, ‘Bad Girl’ திரைப்படம் வசூலில் உயர்ந்த வளர்ச்சி காணாமலிருக்க, வெற்றிமாறன் தனது தயாரிப்பு செயல்பாடுகளை நிறுத்தும் முடிவை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்படம் எதிர்பாராத விதமாக சூப்பர் ஹிட் ஆனால், அவர் தனது முடிவை மாற்றக்கூடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!