• Jun 03 2026

'கில்லர்’ ஷூட்டிங் தளத்தில் திடீர் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு! அதிரவைத்த சம்பவம்

Aathira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் தனித்த இடத்தை பிடித்திருப்பவர் எஸ்.ஜே. சூர்யா. அஜித் நடிப்பில் வெளியான ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், பின்னர் விஜய் நடித்த ‘குஷி’ மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து ‘நியூ’ படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கி, வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

இந்நிலையில், தற்போது எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்து வரும் புதிய திரைப்படம் ‘கில்லர்’ படப்பிடிப்பில் அதிர்ச்சிகரமான விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. படத்தில் வெடிகுண்டு காட்சி ஒன்றை உருவாக்குவதற்காக சிலிண்டரில் வாயு நிரப்பும் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் படப்பிடிப்பு தளம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.


இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டதா? தொழில்நுட்ப தவறுகள் ஏதும் ஏற்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘கில்லர்’ படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement