இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’, வெளியாகும் முன்பே வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் சுமார் 2,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் ராமராக நடிகர் ரன்பீர் கபூரும், ராவணனாக நடிகர் யாஷும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். மேலும், சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகி வரும் இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகளாவிய ரீதியில் முன்பதிவு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும், இதுவரை முன்பதிவு மூலமாகவே 75 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் வெளியாகும் முன்னரே இத்தகைய வரவேற்பு கிடைத்திருப்பது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 2,000 கோடி ரூபாய் வரை வசூலிக்கக்கூடும் எனவும் சினிமா வட்டாரங்களில் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. உண்மையிலேயே இந்த எதிர்பார்ப்புகளை ‘ராமாயணா’ பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!