• Jul 21 2026

9 ஆண்டு காத்திருப்புக்கு முடிவா.? துருவ நட்சத்திரம் வெளியீட்டுக்கு புதிய அவகாசம்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டும், இன்னும் திரையரங்குகளை எட்டாத படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்று நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம். 

கடந்த ஒன்பது ஆண்டுகளாக பல்வேறு நிதி மற்றும் சட்டச் சிக்கல்களில் சிக்கித் தவித்து வரும் இந்த திரைப்படம், தற்போது மீண்டும் வெளியீட்டை நோக்கி நகரும் நிலையில் புதிய நீதிமன்ற உத்தரவு ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ள நிலையில், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்களும் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், படம் மட்டும் இதுவரை வெளியாகாமல் இருந்து வருகிறது.

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 2018ஆம் ஆண்டிலேயே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பு செலவுகள், நிதி நெருக்கடிகள், கடன் பிரச்சினைகள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காரணமாக படம் மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. 


படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை நீடித்ததால், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் படி, ‘கொண்டாடுவோம் என்டர்டெய்ன்மென்ட்’ என்ற பெயரில் தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அந்தக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்றும், அந்தத் தொகை கடன்தாரர்களுக்கு முறையாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனைகளை பின்பற்றும் வகையில், ஜூன் 15, 2026-க்குள் திரைப்படத்தை வெளியிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டால், கூடுதல் அவகாசம் கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தொழில்நுட்ப மற்றும் வெளியீட்டு ஏற்பாடுகள் முழுமையாக நிறைவடையாததால், ஜூன் 15ஆம் தேதிக்குள் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. இதையடுத்து, வெளியீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, திரைப்படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31, 2026 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, பல ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement