• Jul 20 2026

புற்றுநோயை எதிர்கொள்ள நம்பிக்கைதான் மிகப்பெரிய மருந்து.! நடிகை மம்தா மோகன் தாஸ்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்தோ–அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையின் 25வது ஆண்டு விழா மிகுந்த உணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை மம்தா மோகன் தாஸ், புற்றுநோயை வென்று மீண்டு வந்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர், வாழ்க்கையில் வரும் சில போராட்டங்கள் மிகவும் கடினமானவை என்றாலும் அவை நிரந்தரமல்ல என்பதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். சில சவால்கள் நீண்ட காலம் நீடிக்கலாம், சோர்வை ஏற்படுத்தலாம். ஆனால் அவற்றையும் கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கைதான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்று அவர் கூறினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை குறித்து பேசும்போது, நோயின் உடல் வலியை விட மனதின் தனிமை அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். ஒருவரை சுற்றி பலர் இருந்தாலும், தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற உணர்வு தான் நோயாளிகளுக்கு மிகப் பெரிய சுமையாக மாறுகிறது என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.


இந்த மருத்துவமனை நிறுவப்பட்ட பின்னணியை நினைவு கூர்ந்த அவர், என்.டி. ராமராவ் அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த நிலையம் கடந்த 25 ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்காற்றி வருவதாக பாராட்டினார். நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது தந்தையின் தொலைநோக்கு பார்வையை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புற்றுநோயை எதிர்கொள்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாது மன உறுதியும் சமூக ஆதரவும் மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார். “இந்தப் போராட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆகியோருக்கு நம்பிக்கையும் வலிமையும் கிடைக்க வேண்டும்” என்றும் அவர் பேசினார்.

இறுதியாக அவர் கூறிய கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் அவர் புற்றுநோய்க்கு மருந்து இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால் நிச்சயமாக இருக்கும் ஒன்று நம்பிக்கைதான். அந்த நம்பிக்கைதான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தும் மிகப்பெரிய சக்தி என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement