• May 30 2026

சினிமாவுக்காக வாழ்ந்த மனிதரின் கடைசி நிலை இப்படியா.? ரசிகர்களை உலுக்கிய விமர்சகரின் மரணம்

Aathira / 20 hours ago

Advertisement

Listen News!

சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், வாழ்க்கையாக நேசித்த மனிதர்களில் ஒருவர் சத்யேந்திரன். இவர் யூடியூபில் பல்வேறு திரைப்படங்களுக்கு தனது தனித்துவமான விமர்சனங்களை அளித்து சமீபகாலமாக ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், நடிகரும் விமர்சகருமான சத்யேந்திரன் நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி திரை ரசிகர்கள் மற்றும் யூடியூப் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சத்யேந்திரன், கன்னட மொழியில் இளங்கலை பட்டம் பெற்றவர். கல்லூரி காலத்திலேயே உலக திரைப்படங்கள், இலக்கியங்கள் மற்றும் பல மொழிகளின் கலாசாரங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். குறிப்பாக உலக சினிமாவை ஆர்வமாக பார்ப்பது அவரது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது.

அந்த ஆர்வமே அவரை நடிப்புலகிற்கு இழுத்துச் சென்றது. கன்னட எழுத்தாளர் மற்றும் இயக்குநர் கிரிஷ் கர்னாட் இயக்கிய நாடகங்களில் நடித்த அவர், 1978 ஆம் ஆண்டு வெளியான “கிரஹனா” என்ற கன்னட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தில் கிடைத்த வரவேற்பு அவரை சினிமாவில் தொடர்ந்து பயணிக்க தூண்டியது.


அதன்பிறகு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்த சத்யேந்திரன், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையிலேயே வசித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான “ஏழாவது மனிதன்” திரைப்படத்தில் நடிகர் ரகுவரனின் ரூம்மேட்டாக நடித்திருந்தார். அதன்பின்னர் தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 175 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் 6 மெகா சீரியல்கள், ஒரு ஹாலிவுட் திரைப்படம் மற்றும் ஒரு ஜெர்மன் மொழிப் படத்திலும் அவர் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் சத்யேந்திரன் தோன்றியுள்ளார்.

நடிப்பைத் தாண்டி, ஜெர்மன் மொழி ஆசிரியராகவும் பகுதி நேர பணியில் ஈடுபட்டு வந்தார். ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய, ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

சென்னையில் உலக திரைப்படங்கள் திரையிடப்படும் எந்த நிகழ்ச்சியிலும் தவறாமல் பங்கேற்பவர் என்ற பெயரும் அவருக்கு இருந்தது. இளம் திரைப்பட ரசிகர்களுடன் நேரம் செலவிட்டு உலக சினிமா பற்றி பேசுவதில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக யூடியூபில் அவர் அளித்த திரைப்பட விமர்சனங்கள் ரசிகர்களிடையே வைரலானது. குறிப்பாக “லியோ” உள்ளிட்ட பல கமர்ஷியல் படங்கள் குறித்து அவர் பேசிய விதம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. வயதை தாண்டியும் சினிமா மீதான அவரது காதல் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தற்போது அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பெங்களூரில் உள்ள உறவினர்களை தொடர்புகொள்ள முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவை நேசித்த ஒரு உண்மையான திரைப்பட மனிதரை இழந்துவிட்டோம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement