மலையாள சினிமாவில் வெளியான மார்கோ படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக “காட்டாளன்” உருவாகியுள்ளது.
ஷரீப் முகமத் தயாரிப்பில், இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ள இந்தப் படம், நேற்று உலகம் முழுவதும் 1100-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகியுள்ளது. ஆக்ஷன், அதிரடி, சஸ்பென்ஸ் ஆகியவற்றை கலந்த இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு மற்றும் பாலிவுட் நடிகர் பார்தத் திவாரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“காட்டாளன்” படத்தின் முக்கிய அம்சமாக அதன் ஆக்ஷன் காட்சிகள் பேசப்பட்டு வருகின்றன. தாய்லாந்தில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிகளை, உலகப் புகழ்பெற்ற “ஓங்-பேக்” திரைப்படத்தின் ஆக்ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது குழுவினர் வடிவமைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், “ஓங்-பேக்” படத்தில் நடித்த புகழ்பெற்ற யானை “பொங்” இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு இசையமைத்துள்ள அஜனீஷ் லோக்நாத், “காந்தாரா” திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். தற்போது “காட்டாளன்” மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
மேலும், தணிக்கை வாரியம் இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆக்ஷன் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இப்படம் ரசிகர்களிடம் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், “காட்டாளன்” படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். “லியோ காப்ரல்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டருடன் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜின் தோற்றம் சில நிமிடங்களே இருந்தாலும், அது திரையரங்குகளில் விசில் சத்தத்தை கிளப்பும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். “லியோ” வெற்றிக்குப் பிறகு லோகேஷ் மீண்டும் திரையில் தோன்றியது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக மாறியுள்ளது.
Listen News!