பிரபல சமையல் கலைஞரும் தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகார் தொடர்பான விவகாரத்தில், DNA பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதனிடையே, இந்த வழக்கு நீதிமன்றத்திலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, அந்தக் குழந்தையின் தந்தை யார் என்பது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், குழந்தைக்கு தானே தந்தை என்பது DNA பரிசோதனையில் உறுதியானால், குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தேவையான பொறுப்புகளை ஏற்கத் தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் DNA பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் உயிரியல் ரீதியான தந்தை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஜாய் கிரிசில்டா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வந்தார்.
பின்னர், இருவரும் சுமூகமான முடிவை எட்டியுள்ளதாகத் தெரியவந்த நிலையில், தங்களது குழந்தைக்கு “ராகா ரங்கராஜ்” என பெயர் வைத்துள்ளதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.
இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகன் ராகாவை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில்,
“என் மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த 6 மாதங்களாக முழுப்பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன்.
இனி என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழு பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த பயணம் ஒரு குழந்தையின் உரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது,
“ஒரு தாய் மட்டுமே உணரக்கூடிய போராட்டத்துடன் இருந்த இந்த பயணத்திற்குப் பிறகு, என் மகன் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறான்.
ஆனால், அமைதியாக அழுத அந்த தாயின் வலியை யாரும் பார்க்கவில்லை. தனது குழந்தைக்கு கிடைக்க வேண்டிய உண்மையை வழங்க ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நின்ற தாயையும் யாரும் பார்க்கவில்லை.
இந்தப் போராட்டம் யார் சரி, யார் தவறு என்பதை நிரூபிப்பதற்காக அல்ல. ஒரு குழந்தை அங்கீகரிக்கப்படவும், அன்பைப் பெறவும், பாதுகாக்கப்படவும் தகுதியானவன் என்பதை உறுதி செய்வதற்காக மட்டுமே.
ராகா ரங்கராஜ் ‘நான் யார்?’ என்ற குழப்பத்துடன் ஒருபோதும் வளரக்கூடாது என்பதே எனது ஒரே நோக்கம். இன்று, உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளன.
Listen News!