• Aug 02 2026

தமிழை குறைத்து பேசும் சமூகம் அழிந்தே போகட்டும்" – வைரமுத்து ஆவேசம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலைக்குரிய விடயம் என்றும், தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய பின்னர் அவர் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளையே நம்பியிருக்கின்றனர் என்றார்.

எனினும், இந்த ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலை தொடரக் கூடாது என்றும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் தரமான கட்டமைப்பு, நவீன வசதிகள் மற்றும் தரமான கல்விச் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை விடுத்தார்.


தாய்மொழி கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய வைரமுத்து, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தமிழ்வழிக் கல்வி கற்றவராக இருந்ததை நினைவுகூர்ந்தார்.

“தமிழில் என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழில் படித்த ஒருவரே இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்திருக்கிறார். தமிழை இழிவாகப் பேசும் ஒரு சமூகம் இருந்தால், அந்தச் சமூகம் அழிந்தே போகட்டும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தாய்மொழியின் அவசியத்தை விளக்கி, “தாய்மொழி என்பது கண்களைப் போன்றது. பிற மொழிகள் கண்களுக்கு அணியும் கண்ணாடியைப் போன்றவை. முதலில் தாய்மொழியை முழுமையாகக் கற்றுக்கொண்ட பிறகே மற்ற மொழிகளைக் கற்க வேண்டும்” என்றார்.

அதேநேரத்தில், காலத்தின் தேவையை உணர்ந்து பிற மொழிகளையும் கற்றுக்கொள்வது தவறல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தி மொழியையும் கற்க விருப்பமிருந்தால் கற்றுக்கொள்ளுங்கள். உலகம் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் தேவைக்கேற்ப பிற மொழிகளையும் கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” எனவும் கவிஞர் வைரமுத்து தனது உரையில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement