அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ‘மூன்றாம் கண்’. இந்த படத்தில் நடிகர்கள் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி மற்றும் சுந்தரா டிராவல்ஸ் ராதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளராக அஜீஸ், ஒளிப்பதிவாளராக என்.எஸ். உதயகுமார், பின்னணி இசையமைப்பாளராக ராஜ் பிரதாப் பணியாற்றியுள்ளனர். இந்த படம் முழுவதும் ஹைபர்லிங்க் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
இந்த படம் தொடர்பில் இயக்குனர் சசோ கணேசன் கூறியதாவது, ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திடீரென கொலை செய்யப்படுகிறார். அதிர்ச்சியாக, அந்தக் கொலையை நான்தான் செய்தேன் என்று நான்கு பேர் தனித்தனியாக ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களில் ஒருவர் மட்டுமே உண்மையான குற்றவாளி. அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் மையக் கதை என தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தில் காதல் காட்சிகள் இடம்பெறவில்லை என்றும், முழுக்க முழுக்க கிரைம் திரில்லர் அனுபவத்தை வழங்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிஜமான பேக்டரியில் படமாக்கப்பட்ட கொலை காட்சிகளை பார்த்த பணியாளர்கள், அது உண்மை சம்பவம் என நினைத்து பயந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ‘மூன்றாம் கண்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான டீசர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான டிரெய்லர் மக்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதேவேளை படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!