தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயமாக போற்றப்படும் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், ஏன் அவரது குடும்ப வீட்டில் அல்லாமல் பண்ணை வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து அவரது உறவினரான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்த தோப்பை பாரதிராஜா சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். மன அழுத்தம் அதிகமாக இருந்தாலோ, வாழ்க்கையில் ஏதேனும் அழுத்தங்கள் இருந்தாலோ அமைதியை தேடி அவர் அதிகம் வந்து தங்கிய இடம் இதுதான். இங்கே ஒரு அழகான கெஸ்ட் ஹவுஸையும் தனது விருப்பத்திற்கு ஏற்றபடி கட்டியிருந்தார் என்றார்.
மேலும், திரையுலகின் முக்கிய பிரபலங்களான இளையராஜா, வைரமுத்து உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களை கூட அவர் இந்த இடத்திற்கு அழைத்து வந்து நீண்ட நேரம் மனம் விட்டு பேசி இருப்பார். இந்த இடம் அவருக்கு ஒரு சாதாரண பண்ணை வீடு இல்லை. தாயின் மடியில் படுத்திருப்பது போன்ற மனநிறைவை தரும் இடம் என்று பலமுறை சொல்லியிருக்கிறார் என நினைவுகூர்ந்தார்.
அவரது மகன் மனோஜ் உயிரிழந்தபோதும் இறுதி நிகழ்வை இங்கே நடத்த வேண்டும் என்ற விருப்பம் பாரதிராஜாவுக்கு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது அவரது விருப்பத்திற்கேற்ப இந்த பண்ணை வீட்டிலேயே இறுதி அஞ்சலி மற்றும் அடக்க நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தேனியில் உள்ள குடும்ப வீடு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதாலும், அங்கு அதிக அளவில் மக்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாரதிராஜாவுடனான தனது உறவு குறித்து பேசிய அவர், எங்கள் குடும்பத்திற்கு அடுத்ததாக நாங்கள்தான் அவருக்கு மிக நெருக்கமானவர்கள். நான் காவல்துறையில் பணியாற்றிய காலத்தில், குறிப்பாக எஸ்.பி.யாக இருந்தபோது, அவர் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். 'பாரதிராஜாவின் அக்கா மகன்' என்ற அடையாளமே சமுதாயத்தில் எனக்கு ஒரு தனி மரியாதையை கொடுத்தது என்று கண்கலங்கியபடி பகிர்ந்து கொண்டார்.
மன அமைதிக்காக அவர் தேடி வந்த அந்த பண்ணை வீடே, இன்று அவரது இறுதி உறக்கத்திற்கான இடமாக மாறியிருப்பது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மேலும் உருக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!