சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமான ‘கூலி’ இந்த மாதம் 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அமீர் கான், சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திரைப்படம் வெளியான பிறகு, சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்படாமல் தடுக்க ‘கூலி’ பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.

அந்தவகையில் 36 இணைய தள சேவை நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், ‘கூலி’ படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவது, பகிர்வது, பதிவிறக்கம் செய்வது போன்ற எந்தச் செயலுக்கும் தடை விதித்து, 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரைப்படம் வெளியான பிறகு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தயாரிப்பு குழுவும், அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கூலி’, ரஜினிகாந்தின் 171வது படமாகும். இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை கிளப்பியுள்ளது.
படம் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
Listen News!