• Sep 14 2025

தளபதி அரசியலுக்கு தயார்.. ஆனா புலியா இல்லே...!டி.ராஜேந்தர் கடுமையான விமர்சனம்...!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

திரையுலக இயக்குநரும், நடிகரும், உரையாடல்களில் தனக்கென தனி பாணியை கொண்டவருமான டி.ராஜேந்தர் (டி.ஆர்), நடிகர் விஜயின் அரசியல் பயணத்தை தன்னிகரற்ற பாணியில் விமர்சித்து, அதே நேரத்தில் வாழ்த்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.


தனது சொந்த யூடியூப் சேனல் ‘டி.ஆர். டாக்கீஸ்’ வாயிலாக பேசிய அவர், விஜயை விமர்சிப்பது என்கிற நோக்கத்தில் அல்ல என்றும், அவரிடம் தனிப்பட்ட விரோதமோ, வெறுப்போ இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். “விஜய் எனக்கு பிடிக்க ஆரம்பித்தது ‘பூவே உனக்காக’ படம் பார்த்ததிலிருந்து தான். அதன் பின் ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் மூலம் அவரது நடிப்பில் ஒரு மரியாதை ஏற்பட்டது. சினிமாவில் எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்காது. ஆனால் விஜயை ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாது,” என அவர் கூறினார்.


அதோடு, தனது பெயரை விஜய் 'வேலாயுதம்' படத்தில் குறிப்பிட்டதாகவும், அது இருவருக்கும் இடையில் சிறிய நட்பு ஒரு பாலமாக அமைந்ததாகவும் டி.ஆர் நினைவுகூர்ந்தார். "அந்த படத்தில் 'டிடிஆர் தெரியுமா?' என்று கேட்டதற்கே பதிலாக, 'எனக்கு டி.ஆர்தான் தெரியும்' என்று கூறியது எனக்கு சந்தோஷத்தைத் தந்தது," என்றார்.

விஜயின் ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட நிகழ்வையும் அவர் பகிர்ந்தார். “புலி என்றால் எனக்கு பிடிக்கும். அதனால் தான் அந்த விழாவில் ‘வாடா புலி’, ‘அந்த புலி’, ‘இந்த புலி’ என்று புகழ்ந்தேன்,” என்று தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் கூறினார்.


விஜய் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சவால்களையும், அவற்றை கடந்து வந்த பாதையையும் டி.ஆர் பாராட்டினார். “அவர் மீது திரையுலகில் பல தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால், தனது முயற்சியால், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் ஆதரவுடன், ஒரு முன்னணி நடிகராக வளர்ந்தார்,” என அவர் கூறினார்.

அது மட்டுமின்றி, “அஜித் தலயாக வளர்ந்தாலும், தன்னுடைய தலையை தளரவிடாமல் தளபதியாக விஜய் உயர்ந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக இருக்கிறார் என்றால், அவர் உண்மையில் ஒரு புலிதான்,” என்றார் டி.ஆர்.

இறுதியாக, அரசியல் குறித்து அவர் சிறிது சந்தேகத்துடன் கூறினார்: “அரசியலில் அவர் புலியா இல்லையா என தெரியவில்லை. ஆனால் சில அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டது மட்டும் நிச்சயம்,” என்று சாடியோ, சிரித்தோ தெரியாத பாணியில் சொல்வதற்குள் முடித்து விட்டார்.

Advertisement

Advertisement