• Jun 03 2026

'கெணத்த காணோம்' திரையரங்கில் தவறவிட்டீர்களா.? இப்போது ஓடிடியில்.! முழுவிபரம் இதோ...

Aathira / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், கதையின் நாயகனாகவும் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வருபவர் யோகி பாபு. வழக்கமான காமெடி கதாபாத்திரங்களை தாண்டி, வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வரும் அவர், சமீப காலங்களில் பல சமூக கருத்துகளை பேசும் படங்களிலும் தோன்றியுள்ளார்.

அந்த வரிசையில் உருவான படம்தான் 'கெணத்த காணோம்'. சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படத்தை, தனித்துவமான கதைகளுக்காக அறியப்படும் இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். மேலும் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். 

ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையை கவனித்துள்ளார்.


இந்தப் படத்தின் கதையைப் பொறுத்தவரை, கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது. அந்த கிராமத்தில் கோவில் பூசாரியாக யோகி பாபு நடித்துள்ளார். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியாக ஒரு இடத்தில் தோண்டப்படும் குழி, எதிர்பாராத சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது. அதன் பின்னர் கிராம மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அதனைச் சுற்றிய மர்மங்கள் திரைக்கதையின் மையமாக அமைந்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கவில்லை என்றாலும், அதன் கதைக்களம் மற்றும் சமூக கருத்துக்காக பலரின் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக கிராம வாழ்க்கை, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மனிதர்களின் வாழ்வாதார போராட்டத்தை எதார்த்தமாக பதிவு செய்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  'கெணத்த காணோம்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்களுக்கு தற்போது இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement