1995 ஆம் ஆண்டு மன்சூர் அலிகானை வைத்து சிந்துபாத் என்ற படத்தை தயாரித்தவர் தான் ஜெயமுருகன். இதைத்தொடர்ந்து பாண்டியராஜன், புருஷன் எனக்கு அரசன், ரோஜா மலரே, அடடா என்ன அழகு, தீ இவன் போன்ற படங்களை தயாரித்து உள்ளார்.
ரோஜா மலரே என்ற படத்தில் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகினார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் அடடா என்ன அழகு, தீ இவன் படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். இவர் தயாரித்த பூங்குயிலே என்ற படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
இவ்வாறு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் திகழ்ந்து வந்த ஜெயமுருகன் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி தனது குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஜெயமுருகனுக்கு நேற்றைய தினம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதை தொடர்ந்து அவருடைய உடல் தென்னம்பாளையத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் அவருடைய குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளார்கள். இவருடைய திடீர் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!