• Sep 17 2026

சூரி ரசிகர்களுக்கு குட் நியூஸ்..! ‘மண்டாடி’ இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ள நடிகர் சூரியின் அடுத்த திரைப்படமான ‘மண்டாடி’ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக கவனம் பெற்ற சூரி, தொடர்ந்து விஜய்யின் ‘ஜில்லா’, அஜித்தின் ‘வேதாளம்’, ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக புதிய பயணத்தைத் தொடங்கிய சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ மற்றும் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய ‘மாமன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றியை பதிவு செய்துள்ளன. குறிப்பாக ‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வசூலை ஈட்டியிருந்தன.


இந்த நிலையில், மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மண்டாடி’. எல்ரட் குமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் மற்றும் சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுப் போட்டிகளை மையமாக வைத்து ‘மண்டாடி’ திரைப்படம் உருவாகியுள்ளது.


இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், சிறப்பு வீடியோ மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் சூரியின் நடனம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் இசை வெளியீடு தொடர்பான முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை இன்று, ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும், திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

காமெடி நடிகராக தொடங்கி கதாநாயகனாக உயர்ந்துள்ள சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு பூர்த்தி செய்யும் என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்.

Advertisement

Advertisement