• Jul 30 2026

கிறிஸ்டோபர் நோலனுக்கே மறக்க முடியாத தருணத்தை கொடுத்த கமல்ஹாசன்.. முழுவிபரம் இதோ.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன், உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் புதிய படைப்பான 'தி ஒடிஸி' திரைப்படத்தை மனதாரப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக புதுமைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நோலனின் திரைப்படங்கள் மீது கமல்ஹாசனுக்கு எப்போதும் தனித்துவமான மரியாதை இருப்பது அறிந்த விஷயமாகும்.


கமல்ஹாசனும் கிறிஸ்டோபர் நோலனும் கடந்த 2018-ஆம் ஆண்டு நேரில் சந்தித்தபோது நடந்த சம்பவமும் ரசிகர்களால் மீண்டும் நினைவுகூரப்படுகிறது. அப்போது, நோலனின் 'டன்கிர்க்' திரைப்படத்தை திரையரங்கில் அல்லாமல் டிஜிட்டல் வடிவில் பார்த்ததற்காக கமல்ஹாசன் நகைச்சுவையாக மன்னிப்புக் கேட்டதாக கூறப்படுகிறது. அதே சந்திப்பில் தனது 'ஹே ராம்' திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பை நோலனுக்கு வழங்கியிருந்தார். மேலும், கமலின் 'பாபநாசம்' திரைப்படத்தைப் பார்த்திருந்த நோலன், அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கத்தைப் பாராட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'தி ஒடிஸி' திரைப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். "ஹோமர் இதை கற்பனையாகக் கண்டார். நோலன் இதைச் செய்ய துணிந்தார். நான் இதைக் கரவொலி எழுப்பிப் பாராட்டுகிறேன். சினிமா விரும்பிகளே, இந்த திரைப்படம் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்திற்காக தாம் பதிவு செய்த பாராட்டு உரை விரைவில் இந்திய திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்றும், அதை ரசிகர்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்வேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவரது இந்த பாராட்டு பதிவு, இந்திய திரையுலகில் மட்டுமல்லாமல் சர்வதேச சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Advertisement

Advertisement