• Jun 19 2026

பல தோல்விகளுக்குப் பிறகு ஜீவாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பா?… வெளியான புதிய அப்டேட்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் இளைஞர்களின் மனதை கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஜீவா. சிவா மனசுல சக்தி, கோ, நண்பன் போன்ற வெற்றி படங்கள் மூலம் ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற அவர், கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் தடுமாறி வருகிறார்.

தலைவர் தம்பி திரைப்படத்திற்குப் பிறகு ஜீவா நடித்து வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் தற்போது கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இவானா நடித்துள்ளார். இளம் ரசிகர்களை கவரும் வகையில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப அம்சங்கள் கலந்த கதையாக இப்படம் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் எம். ராஜேஷ்  இயக்கியுள்ளார். 


அதுமட்டுமின்றி, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதும் படத்தின் மீது ரசிகர்களின் கவனத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 21-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ‘சிவா மனசுல சக்தி’ மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த ஜீவா – ராஜேஷ் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.  

தொடர்ச்சியான வெற்றிகளை தேடி வரும் ஜீவாவுக்கு ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. இந்த படம் அவரது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்குமா அல்லது இன்னொரு சவாலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement