லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இயக்குநர் வெங்கி அட்லூரி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
வித்தியாசமான கதைக்களம், துல்கர் சல்மானின் நடிப்பு, திரைக்கதையின் விறுவிறுப்பு ஆகியவற்றால் இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்திருந்ததுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தன.

இந்நிலையில், ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “லக்கி பாஸ்கர் 2 திரைப்படம் நிச்சயம் உருவாகும். ஆனால் அதற்காக ரசிகர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். தற்போது ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரண்டு திரைப்படங்களின் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் பாகம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, இரண்டாம் பாகத்தை அதற்கேற்ற தரத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பாகத்தின் வெற்றிக்கு ஏற்ற வகையில், இரண்டாம் பாகமும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படியாக இருக்க வேண்டும். அதனால் அவசரமாக பணிகளை தொடங்காமல், முழுமையான திட்டமிடலுடன் செயல்பட உள்ளோம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே ‘லக்கி பாஸ்கர் 2’ பணிகள் தொடங்கும் என வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Listen News!