நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. ஃபேண்டஸி ஆக்ஷன் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கருப்பு படத்தின் 6வது நாள் வசூலில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, Sacnilk வெளியிட்ட தகவலில், 6வது நாளில் மட்டும் ‘கருப்பு’ இந்தியாவில் ரூ.10.30 கோடி நெட் வசூல் செய்துள்ளது. இது 5வது நாள் வசூலான ரூ.12.75 கோடியை ஒப்பிடும்போது சுமார் 19 சதவீதம் குறைவாகும்.
மேலும், நேற்று புதன்கிழமை மட்டும் மொத்தமாக 6,194 காட்சிகளில் படம் திரையிடப்பட்டது. குறிப்பாக மாலை மற்றும் இரவு காட்சிகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை ‘கருப்பு’ இந்தியாவில் ரூ.105.35 கோடி நெட் வசூலையும், ரூ.121.96 கோடி கிராஸ் வசூலையும் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் மட்டும் 6வது நாளில் ரூ.3 கோடி வசூலான நிலையில், ஓவர்சீஸ் வசூல் மொத்தம் ரூ.54 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் உலகளாவிய மொத்த வசூல் தற்போது ரூ.175.96 கோடியை எட்டியுள்ளது.

தமிழ் பதிப்பு மட்டுமே 6வது நாளில் ரூ.8.55 கோடி நெட் வசூல் செய்துள்ளது. 4,429 காட்சிகளில் திரையிடப்பட்ட இந்த பதிப்புக்கு சுமார் 35 சதவீத பார்வையாளர் வருகை பதிவாகியுள்ளது.
அதேபோல் தெலுங்கு பதிப்பு ரூ.1.75 கோடி நெட் வசூல் செய்துள்ளது. மேலும், மாநில வாரியாக பார்க்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ரூ.8.35 கோடி கிராஸ் வசூல் கிடைத்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.1.80 கோடி, கர்நாடகாவில் ரூ.82 லட்சம், கேரளாவில் ரூ.80 லட்சம் வசூலாகியுள்ளது.
இதேவேளை, இந்த படத்தின் கதைக்களம் மற்றும் நீதிமன்றக் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், குறிப்பாக சூர்யாவின் மாஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
Listen News!