• Jul 20 2026

உடல் எடை குறித்து ட்ரோல்... அமைதியை உடைத்த சக்தி வாசு..? புதிய அவதாரத்தில் கம்பேக்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் சக்தி வாசு, தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘அனலி’ திரைப்படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பை விட தோற்றமே இணையத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் சக்தி வாசு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது உடல் எடை, தோற்றம் மற்றும் ஆடைத் தேர்வு குறித்து பலரும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் பதிவிட்டு வருகின்றனர். 

அதேவேளையில், ஒரு கதாபாத்திரத்திற்காக நடிகர் எடுத்த மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது சரியல்ல என்றும் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


பிரபல இயக்குநர் பி. வாசுவின் மகனான சக்தி வாசு, ‘தொட்டால் பூ மலரும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மீண்டும் சினிமாவில் தனது இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்கு சக்தி வாசு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் பதிலளித்துள்ளார்.

அதில், "விரைவில் என்னுடைய புதிய அவதாரத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இந்த மாற்றம் அனைத்தும் 'கராத்தே பாபு' திரைப்படத்திற்காகவே. என்னை ட்ரிகர் செய்த அனைவருக்கும் நன்றி. அதுவே எனக்கு இன்னும் அதிகமாக உழைக்க உத்வேகமாக அமைந்தது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் அவரது தன்னம்பிக்கையை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம், ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் சக்தி வாசு எந்த மாதிரியான புதிய தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement