தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஷாலினி. ‘ராஜா சின்ன ரோஜா’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நடிகையாக நடித்த அவர், பின்னர் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பிரியாத வரம் வேண்டும், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, அமர்க்களம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார். கிளாமர் இல்லாமலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஷாலினியும் ஒருவர்.
அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகர் அஜித்துடன் காதல் மலர, இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகிய ஷாலினி, குடும்பம் மற்றும் குழந்தைகள் வளர்ப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார். அஜித்தின் ரேஸிங் பயணங்களிலும் அவர் பக்கபலமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாலினி சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தனது குழந்தைகள் இதுவரை தன் படங்களை பார்க்கவில்லை என்றும், ‘அலைபாயுதே’ படத்தை பார்க்க வேண்டும் என்று மகள் சமீபத்தில் கேட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது துபாயில் ரேஸில் பங்கேற்றுள்ள அஜித்துக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
Listen News!