தமிழ் திரையுலகின் தளபதி என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றது.
இதில் தலைவராக விஜய் கலந்து கொண்டு, “நான் வரேன்…” என்ற பாடலுடன் ரேம்ப் வாக் நிகழ்த்தினார்.
இவ்வாறு பல இலட்சக்கணக்காணோர் பங்கேற்ற இரண்டாவது மாநில மாநாடு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது குறித்த மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக் செய்யும் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மேடையை நோக்கி செல்ல முயன்றனர்.
இதன்போது, 3,000க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் கடுமையாக செயல்பட்டு அவர்களை தடுத்தனர்.
சிலர் மேடையில் ஏற முயன்ற வேளையில் தூக்கி தரையில் வீசப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனால் பலர் படுகாயமடைந்து வீதியிலும் மேடையிலும் வலியுடன் புரண்டபடியே கதறினர். மற்றொருவர் கம்பியிலேயே தொற்றிக்கொண்டு உயிரைக் காக்க முயன்றார்.
இந்த சம்பவங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரேம்ப் மேடையில் ஏற முயன்றதற்காக பவுன்சர்கள் தூக்கி வீசியதாகக் குற்றச்சாட்டு செய்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய சம்பவத்தில் விஜய் மீது முதல் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
முதல் குற்றவாளியாக விஜய், மேலும் 10 பவுன்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவமானது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் பொலிஸார் எந்த விதத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளனர் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!