• Jul 30 2026

சிவாஜி குடும்பத்தில் புதிய ஹீரோ... தர்ஷன் கணேசனின் ‘லெனின் பாண்டியன்’

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன், ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.

புதுமுக இயக்குநர் டிடி பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மணல் கொள்ளை பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் ஒரு காவல் அதிகாரியின் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படம், சமூக கருத்துடன் கூடிய ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் தர்ஷன் கணேசனுடன், கங்கை அமரன் மற்றும் ரோஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஷ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.


இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளமை கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அவரது இசையில் வெளியான பாடல்களும், அண்மையில் வெளியான டீசரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தர்ஷன் கணேசனின் திரையுலகப் பயணத்திற்கு முக்கியமான தொடக்கமாக அமையும் என சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.

இதற்கிடையில், படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிவாஜி கணேசனின் குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்ந்து திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் தர்ஷன் கணேசன், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement