• Sep 17 2026

பல நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி… ரகுமான் - பிரபுதேவா கூட்டணியின் அப்டேட் இதோ!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

1990-களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கூட்டணிகளில் முக்கியமானது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடனப்புயல் பிரபுதேவா கூட்டணி. இருவரும் இணைந்த படங்களின் பாடல்கள் மட்டுமின்றி, அதில் இடம்பெற்ற நடனமும் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ‘காதலன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவர்களது கூட்டணிக்கு தனி அடையாளத்தை உருவாக்கின.

‘பேட்டராப்’, ‘ஊர்வசி ஊர்வசி’, ‘முக்காலா முக்காபுலா’, ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஏ.ஆர்.ரகுமானின் வித்தியாசமான இசையும், பிரபுதேவாவின் துள்ளலான நடனமும் இணைந்து இந்த பாடல்களை காலம் கடந்தும் ரசிக்கக்கூடிய படைப்புகளாக மாற்றின.


இந்நிலையில், ‘மின்சார கனவு’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மூன்வாக்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.

பிரபுதேவாவுடன் ஏ.ஆர்.ரகுமான், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதனையடுத்து, ‘மூன்வாக்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் - பிரபுதேவா கூட்டணியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த ரிலீஸ் அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement