விஜய் டிவியின் புகழ்பெற்ற காமெடி நடிகர் KPY பாலா, ரசிகர்களிடம் தனது நையாண்டி திறமையால் மட்டுமல்ல, மனிதநேயம் நிறைந்த செயல்களாலும் இன்று மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார். சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவர், சமீபத்தில் தனது கனவான ஒரு இலவச மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
பொதுவாக, அதிகம் பணம் சம்பாதித்தவர்கள் முதலில் சொந்த வீடு, சொகுசு வாழ்க்கை என தங்களை மட்டுமே நினைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் பாலா, தனது சொந்த நிலத்தில் வீடு கட்டுவதை தவிர்த்து, அதே இடத்தில் சமூக நலனுக்காக மருத்துவமனை கட்டப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவருடைய செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
“நான் வீடு கட்டினேன் என்றால் அதில் நான்தான் இருப்பேன். ஆனால் மருத்துவமனை கட்டினால் பலருக்கும் நன்மை ஏற்படும்” என தனது சமீபத்திய பேட்டியில் கூறிய பாலா, சமூகத்தின் மீது உள்ள தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் சிலர், “பல கோடி செலவில் மருத்துவமனை கட்டுபவர் பணத்தை எங்கிருந்து சம்பாதித்தார்?”, “யாருடைய கருப்பு பணம்?” என விமர்சனம் எழுப்பியுள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருக்கும் சினிமா விமர்சகர் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, “பாலா கிடைக்கக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி, உழைத்து சம்பாதிக்கிறார். அவருக்கு ஆதரவும் அதிகம். அவர் நடித்த 'காந்தி கண்ணாடி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சீமான், விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வருவது, அவரின் உண்மை கெளரவத்தைக் காட்டுகிறது,” என தெரிவித்துள்ளார்.
மேலும், “மருத்துவமனை 100 ஏக்கரில் இல்லை; வெறும் ஒரு கிரவுண்ட் நிலத்தில்தான். ஆனால் அதன் பின்னால் இருக்கும் நோக்கம் மிகப்பெரியது. அவர் வீடியோ மூலம் தன் உதவிகளை பகிர்வது, புகழ் தேடுவதற்கல்ல, பிறருக்கும் உதவ உணர்வை ஏற்படுத்துவதற்காகதான்,” என்றும் கூறியுள்ளார்.
பாலாவின் செயற்பாடுகள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இவரை “குடும்ப உறுப்பினர்” போலவே நேசிக்கின்றனர். அவரிடம் மனமுடைந்தவர்கள் போய் உதவி பெற முடியும் என்பதை பலர் உணர்ந்துள்ளனர். இதன் விளைவாக, பலரும் அவருடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
சாதாரண காமெடி நடிகராகப் புகழ் பெற்ற பாலா, இன்று மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சமூக ஊக்குவிப்பாளராக மாறியுள்ளார். அவரது செயலை விமர்சிப்பதற்குப் பதிலாக, பாராட்டி ஆதரிக்க வேண்டிய தருணம் இது.
Listen News!