• Oct 26 2024

சின்மயி சொன்ன ஒரே ஒரு பொய்.. எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்: புலம்பும் டப்பிங் யூனியன் நிர்வாகி

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

பாடகி சின்மயி கூறிய ஒரே ஒரு பொய் காரணமாக எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் என்று டப்பிங் யூனியன் நிர்வாகி ஒருவர் சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ராதாரவி டப்பிங் யூனியன் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் அவருக்கும் பாடகி சின்மயி அவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. டப்பிங் யூனியனுக்கான சந்தாவை சின்மயி செலுத்தவில்லை என்று அவரை ராதாரவி நீக்கிய நிலையில் சின்மயி, தான் லைஃப் டைம் மெம்பர் என்றும் அதனால் மாத சந்தா செலுத்த தேவையில்லை என்றும் தன்னை நீக்கியது செல்லாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இறுதியில் நீதிமன்றம் டப்பிங் யூனியன் எடுத்த முடிவு சரிதான் என்றும் லைஃப் டைம் மெம்பராக சின்மயி சேர்ந்ததற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் தீர்ப்பளித்தது. சின்மயி லைஃப் டைம் மெம்பருக்கான பணம் செலுத்தாமலேயே  கூறிய ஒரே ஒரு பொய் காரணமாக நாங்கள் சில ஆண்டுகள் இந்த வழக்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதனால் டப்பிங் யூனியனுக்கு சில லட்சங்கள் நஷ்டம் என்றும் டப்பிங் யூனியன் உதவி தலைவராக இருந்த ராஜேந்திரன் என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்

இந்த நிலையில் டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் ராதாரவி வயது முதிர்வு காரணமாக தான் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார். இந்த  நிலையில் டப்பிங் யூனியன் துணைத்தலைவரான ராஜேந்திரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவரை எதிர்த்து கதிரவன் என்பவர் போட்டியிட இருக்கும் நிலையில் திடீரென ராதாரவி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.


ராதாரவி மீண்டும் போட்டியிடுவதால் ராஜேந்திரன் போட்டியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தான் போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் டப்பிங் யூனியனில் பல பிரச்சினைகள் இருப்பதால் அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக சின்மயி கூறிய ஒரே ஒரு பொய் காரணமாக டப்பிங் யூனியனுக்கு தேவையில்லாமல் சில லட்சங்கள் நீதிமன்ற செலவாக ஆனது என்றும் அதற்கெல்லாம் அவரிடம் நஷ்ட ஈடு கேட்க வேண்டும் என்று கூறிய அவர் லோகேஷ் கனகராஜ் குறித்தும் சில விஷயங்களை தெரிவித்தார்.

டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லாத சின்மயி, லோகேஷ் கனகராஜ் நடித்த ’லியோ’ படத்தில், த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுத்தார் என்றும் அது தவறு என்று கூறிய ராஜேந்திரன், லோகேஷ் கனகராஜ் இந்த விஷயத்தில் தவறு செய்துவிட்டார் என்றும் அவர் டப்பிங் யூனியனின் விதிகளை மதிக்கவில்லை என்றும் இதற்கெல்லாம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் நான் தலைவராக போட்டியிட்டே தீர வேண்டும் என்றும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement