தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் தனக்கென ஒரு தனித்திறனை காட்டி வரும் தனுஷ், தற்போது இயக்கும் நான்காவது படம் ‘இட்லி கடை’. தனுஷே கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜி.வி. பிரகாஷ். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம், திரை ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் அருண் விஜய், வில்லன் கதாப்பாத்திரத்தில் வித்தியாசமான பாணியில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 1ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் வெளியான பாடல்களில், ‘என்ன சுகம்’ பாடலை தனுஷ் எழுதி, ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து, ‘எஞ்சாமி தந்தானே’ என்ற ராப் பாடல் வெளிவந்துள்ளது, இதில் தனுஷுடன் தெருக்குரல் அறிவு இணைந்துள்ளார்.
இப்போது, செப்டம்பர் 14 அன்று சென்னை நேரு மைதானத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதே நாளில் டிரெய்லரும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான போஸ்டரின் மூலம், நடிகர் பார்த்திபன் இப்படத்தில் ‘அறிவு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு உறுதி செய்துள்ளது.
Listen News!