2023 ஆம் ஆண்டு வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம், முதல் நாளிலேயே ரூ.148.5 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிட்ட விளம்பரம் இந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷாருக் கான் நடித்த 'பதான்' திரைப்படம், நான்காயிரம் திரையரங்குகளில் வெளியானபோதிலும், அதன் முதல் நாள் வசூல் ரூ.104 கோடியே என்ற தகவலை அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால், குறைவான திரையரங்குகளில் வெளியாகிய லியோ எப்படி அதிக வசூல் செய்தது என்ற கேள்விகள் எழுந்தன.
அதைத்தொடர்ந்து, 'லியோ' திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.405 கோடி, ஏழு நாட்களில் ரூ.461 கோடி, பன்னிரண்டு நாட்களில் ரூ.540 கோடி என பல்வேறு போஸ்டர்களின் மூலம் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. முடிவில், இப்படம் ரூ.600 கோடி வசூல் செய்ததாகவும் லலித் குமார் அறிவித்தார். இதனை விஜய் ரசிகர்கள் பெருமையாக பரப்பினர், மற்ற நடிகர்களின் படங்கள் இந்த அளவுக்கு வசூலிக்கவில்லை எனக் கூறி சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் வருமான வரித்துறைக்கு தயாரிப்பாளர் லலித் குமார் சமர்ப்பித்த வருமான கணக்கில், 'லியோ' திரைப்படம் திரையரங்குகளிலிருந்து மொத்தம் ரூ.160.5 கோடி மட்டுமே வசூலித்ததாக வெளியானது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மீதமுள்ள வசூல் பணம் பற்றிய விளக்கம் வருமான வரி கணக்கில்: டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமம் – ரூ.124 கோடி, ஆடியோ உரிமம் ரூ.24 கோடி,ஹிந்தி ரைட்ஸ் – ரூ.24 கோடி, தென்னிந்திய சாட்டிலைட் உரிமம் – ரூ.72.56 கோடி இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.404.56 கோடி வசூல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான வருவாய் திரையரங்குகளிலிருந்து இல்லாமல், உரிமைகளின் மூலம் வந்துள்ளதுதான் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் வெளியான பின், அதன் தயாரிப்பாளர்கள் "404+ கோடி நான்கு நாட்களில்!" என்ற விளம்பரத்தை வெளியிட்டனர். இது, 'லியோ' பட வசூல் விவகாரத்தை நினைவூட்டும் வகையில், நையாண்டி செய்யும் நடவடிக்கையாக ரசிகர்கள் பார்ப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.
இனி 'கூலி' திரைப்படத்தின் உண்மை வசூல் எவ்வளவு என்பது, அதன் தயாரிப்பாளர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது மட்டுமே தெரியவரும் என்பதே திரையுலக பார்வையாக உள்ளது.
Listen News!