துரை செந்தில்குமார் - லெஜண்ட் சரவணன் கூட்டணியில் உருவாகியுள்ள லீடர் திரைப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
தமிழில் வெளியான எதிர்நீச்சல், பட்டாசு, கொடி, காக்கிச் சட்டை, கருடன் ஆகிய படங்களை இயக்கிப் பிரபலமானவர் இயக்குனர் துரை செந்தில்குமார். தற்போது அவர் லீடர் படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திலிருந்து வெளியான போஸ்டர், டீசர், டிரெய்லர் என்பன ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும், இந்தப் படம் தந்தை-மகள் இடையிலான பாசப் பந்தத்தை மையக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தப் படம் சுமார் 300 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
லீடர் படத்தைப் பார்த்த வெற்றிமாறனும் தனுஷும் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இதனால் தயாரிப்பு குழுவிற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் இடம்பெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசிய லெஜண்ட் சரவணன், "இந்தப் படம் ஜெய்லர், விக்ரம் படங்களைப் போல வெற்றி பெறும்" என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் இன்று வெளியான லீடர் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்தப் படம் நிச்சயமாக ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த படம் மிகவும் நன்றாக உள்ளதாகவும், சண்டைக் காட்சிகள் அசத்தலாக அமைந்துள்ளதாகவும், லெஜண்ட் சரவணன் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
தல, தளபதிக்கு இணையாக இந்தப் படத்திற்கும் கூட்டம் வரும், தமிழ் சினிமாவுக்கு புதிய ஹீரோ கிடைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் லெஜண்ட் சரவணனின் தோற்றம் குறித்து பல கேலி கிண்டலுக்கு உள்ளான அவர், இந்தப் படத்தில் மிகவும் அழகாகத் தெரிவதாகவும் ரசிகர்கள் தங்களின் நேர்மறையான விமர்சனங்களில் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!