• Dec 26 2024

’என்னம்மா கண்ணு செளக்கியமா? நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி படத்தில் இணையும் சத்யராஜ்..

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த படத்தில் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னொரு ஆச்சரியமாக சத்யராஜ் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக ஒரே படத்தில் இணைந்து நடிக்கவில்லை என்றும் 'மிஸ்டர் பாரத்’ படத்தில் நடித்த பிறகு அவர்கள் இருவருக்கும் நடிக்கும் சில வாய்ப்புகள் கிடைத்தும் சத்யராஜ் ரஜினி படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ படத்திற்கு வில்லன் சுமன் வேடத்தில் முதலில் சத்யராஜ் தான் முதலில் அணுகப்பட்டதாகவும் ஆனால் ஷங்கர் இடம் சாரி சொன்ன சத்யராஜ், நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் செய்தி வெளியானது.

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிப்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் ’என்னமா கண்ணு சௌக்கியமா’ என்று ரஜினியை அவ்வப்போது கலாய்த்த சத்யராஜ் இந்த படத்திலும் அதே போல் ஏதாவது வசனம் பேசுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement