• Oct 26 2024

மகிழ்ச்சியாக இருந்தாலே குழந்தை பிறந்துவிடுமா? ‘வெப்பம் குளிர் மழை’ விமர்சனம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

 திருமணமான ஒரு பெண்ணிற்கு சில மாதங்களில் குழந்தை பிறக்கவில்லை என்றால் அந்த பெண் என்னென்ன கஷ்டங்களை அனுபவிப்பார் என்ற கதையை கையில் எடுத்துள்ள இயக்குனர் கிராமங்களில் இன்றும் குழந்தை பிறக்காத பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மிக அழகாக சொல்லி இருக்கும் படம் தான் ’வெப்பம் குளிர் மழை’ என்ற படம்.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில் இந்த படம் உண்மையில் இயக்குனர் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

திருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் கதாநாயகிக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால் கணவனின் அக்கா தனது 15 வயது மகளை தம்பிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்கிறார். பேரக்குழந்தை வேண்டும் என்பதற்காக மாமியாரும் அதே முடிவை எடுக்க  குழந்தை பிறக்காததால் ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தில் இருந்து மட்டுமின்றி குடும்பத்திலும் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படும் என்பது தான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

இந்த படத்தின் நாயகன் த்ருவ் மற்றும் நாயகி  இஸ்மத் பானு  ஆகிய இருவரின் நடிப்பும் மிகவும் இயல்பாக உள்ளது. ’என் உயிர் தோழன்’ என்ற படத்தில் பார்த்த ரமா இந்த படத்தில் மாமியார் அவதாரம் எடுத்து உள்ளார். திருமணமான ஆரம்பத்தில் அவர் காட்டும் பாசம், குழந்தை பிறக்கவில்லை என்று தெரிந்தவுடன் அவர் காட்டும் கொடூரம் வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது.  

கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் என்னென்ன பேச்சுக்கள் கேட்க வேண்டும்? எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பதை மிகவும் இயல்பாக இயக்குனர் வேதமுத்து இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காட்சிப்படுத்தி உள்ளார். கடைசியில் ஒரு தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும் ஒரு புதிய உயிர் உருவாகும் என்றும் ஒரு உயிர் உருவாவதற்கு எந்த அறிவியல் காரணமும் தேவை இல்லை என்று கூறி இருப்பது சில நெருடல்களை ஏற்படுத்தி இருந்தாலும்  தம்பதிகள் சந்தோஷமாக இருந்தால் குழந்தை பிறக்கும் என்ற எண்ணத்தை அவர் ஆணித்தனமாக சொல்லி இருக்கிறார்.

 குழந்தையின்மை என்ற பிரச்சினைக்கு பெண்கள் மட்டும் காரணம் அல்ல என்றும் ஆண்களும் காரணமாக இருக்கலாம் என்றும் திரைக்கதையில் போகிற போது எதார்த்தமாக கூறி இருப்பது இயக்குனரின் பிளஸ் பாயிண்ட்.  ஆனால் அதே நேரத்தில் கோவிலுக்கு சென்றால் குழந்தை பிறந்து விடும் என்ற பிற்போக்குத்தனமான காட்சிகள், குழந்தை பிறக்கவில்லை என்றால் என்ன பிரச்சனை என்பதை கண்டறிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற காட்சிகள் இல்லாதது குறையாக பார்க்கப்படுகிறது.

இரண்டு மனங்கள் சந்தோஷமாக இருந்தால் புதிய உயிர் பிறக்கும் என்றதை அழுத்தமாக இயக்குனர் சொல்ல வந்தாலும் அறிவியல் பூர்வமாகவும் சில விஷயங்களை இந்த படத்தில் இணைத்து இருக்கலாம் என்பதுதான் படம் பார்த்து முடித்துவிட்டு வெளியே வரும்போது தோன்றுகிற எண்ணமாக உள்ளது. மொத்தத்தில் ஒரு புதிய முயற்சியை கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் தான் ’வெப்பம் மழை குளிர் மழை’ படம் சொல்லும் பாடமாகும்.

Advertisement