• Dec 26 2024

டைட்டில் மாற்றப்பட்ட ‘ரயில்’ பயணம் வெற்றியா? திரை விமர்சனம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

’வடக்கன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு அதன் பின் சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு காரணமாக ’ரயில்’ என்று டைட்டில் மாற்றப்பட்ட படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்ப்போம்.

தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குங்குமராஜ் முத்துசாமி தனது மனைவி வைரமாலாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் எந்த நேரமும் மதுபோதையில் இருக்கும் குங்குமராஜுக்கு யாரும் வேலை தர முன்வருவதில்லை. இதனை அடுத்து வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தங்களுடைய வேலைகளை பிடுங்கிக் கொள்கிறார்கள் என்று எண்ணும் அவர், வடக்கன்கள் மீது வெறுப்படைகிறார். அந்த வெறுப்பு கோபமாக மாறி எதிர் வீட்டில் இருக்கும் வட மாநில இளைஞர் மீது திரும்பும் நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு விபரீதம் நடந்து வருகிறது. அதனை அடுத்து குங்குமராஜ் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’ரயில்’ படத்தில் குங்குமராஜ் ஆரம்பத்தில் மது போதையில் தள்ளாடியபடி மனைவியுடன் சண்டை போடுவது, வடமாநிலத்தவர்களிடம் கோபமாக நடந்து கொள்வது, அதே நேரத்தில் நண்பர்களிடம் பாசமாகவும், குழந்தைகளுடன் அன்பாகவும் இருப்பது என பல்வேறு விதமான குணாதிசங்கள் உடைய ஒரு கேரக்டராக நம் கண் முன் நிற்கிறார் குங்குமராஜ் முத்துசாமி. ஆனால் அதே நேரத்தில் சில இடங்களில் அழுத்தமான நடிப்பு தேவைப்படும்போது அவரது நடிப்பு மிஸ்ஸிங் என்பதை உணர முடிகிறது.

குங்குமராஜ் மனைவியாக நடித்திருக்கும் வைரமாலா எதார்த்தமான நடிப்பையும் கணவனை மிரட்டுவது அழுது புலம்புவது என அனைத்து எமோஷன்களையும் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். வடமாநில இளைஞராக நடித்திருக்கும் பர்வேஸ்  அப்பாவித்தனமான நடிப்பு, எதார்த்தமான பாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தி அனைவரையும் கவருகிறார். ரமேஷ் வைத்யா உட்பட மற்ற அனைத்து கேரக்டர்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர் .

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, நாகூர் ராமச்சந்திரன் படத்தொகுப்பு, ஜனனி இசை ஆகியவை அனைத்துமே குறை சொல்லும் வகையில் இல்லை. இயக்குனர் பாஸ்கர் சக்தி அமைதியான கிராமம், அந்த கிராமத்தில் உள்ள குசும்புத்தனமான மக்கள் என ஆரம்பத்தில் ரசிக்க வைக்கும் காட்சிகளை எடுத்துள்ள நிலையில், ஹீரோவின் கேரக்டரை வெவ்வேறு விதமாக வடிவமைத்ததில் தான் கொஞ்சம் திணறியுள்ளார்.

இடைவேளையில் நடக்கும் ஒரு அதிரடியான திருப்பத்திற்கு பிறகு இரண்டாம் பாதியில் கதை விறுவிறுப்பாக செய்யும் செல்கிறது. ஆனால் அதே நேரத்தில் சிறிது நேரத்திலேயே அந்த விறுவிறுப்பை தக்க வைத்து கொள்ளாமல் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் திரைக்கதை சலிப்படைய வைக்கிறது.

உள்ளூரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்க்க மாட்டார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்களை அழைத்து வரும் காட்சிகளில் ஒரு மெத்தனம் தெரிகிறது. உள்ளூரில் இருப்பவர்களின் பொறுப்பில்லாத குணத்தால் தான் வட மாநிலத்தவர்களை வேலைக்கு அழைத்து வருவதாக கூறப்படுவது ஒட்டுமொத்த கதைக்கே ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ’ரயில்’ திரைப்படம் அரசியல் ரீதியாகவும் கதை ரீதியாகவும் பக்கபலமாக இருந்தாலும் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை என்பதால் முழுமையாக  ரசிக்க முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு முறை பார்க்கும் வகையிலான ஒரு வித்தியாசமான கதை அம்சம் என்பதிலும் சந்தேகம் இல்லை.

Advertisement

Advertisement