விஜய் டிவிக்குள் மிமிக்கிரி கலைஞராக நுழைந்து கலக்கப்போவது யாரு மற்றும் நடன நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை மக்கள் மத்தியில் பிரதிபலித்தவர் தான் சிவகார்த்திகேயன்.
அதற்குப் பிறகு தொகுப்பாளராக களம் இறங்கி அது இது எது, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் ஆகிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் மக்கள் இடையே நீங்கா இடத்தை பெற்றார்.
இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் காமெடியனாக நடித்தார். அதை தொடர்ந்து எதிர்நீச்சல் படத்திலும் ஹீரோவாக நடிக்க வைத்த தனுஷ் அந்தப் படத்தில் அவருடைய வாழ்வில் சிறந்த திருப்புமுனையை உருவாக்கி கொடுத்தார். இது அவருடைய முதலாவது வெற்றி படமாகவும் அமைந்தது.
அதன் பின்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மான் கராத்தே, ரெமோ போன்ற படங்களில் நடித்து சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கிங் ஆகவும் உயர தொடங்கினார்.
எனினும் இவருடைய நடிப்பில் வெளியான ஹீரோ, மிஸ்டர் லோக்கல், சீம ராஜா போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. இதனால் கடனிலும் சிக்கினார். அதன்பின் வெளியான டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான் ஆகிய படங்கள் இவரை மீட்டெடுத்தது.
இறுதியில் அமரன் படத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தார். மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றில் நடித்த சிவகார்த்திகேயன் அவராகவே வாழ்ந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றார். இந்த படம் 350 கோடிகளை கடந்து மாபெரும் வெற்றி கண்டது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் இன்றைய தினம் தனது 40 பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
அதன்படி ஒரு படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயனிடம் தற்போது 160 கோடிக்கு மேல் சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சென்னையில் பங்களா ஒன்றும் அதில் நீச்சல் குளம், ஜிம் என சகல வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவரிடம் பிஎம்டபிள், மினி கூப்பர், பென்ஸ் போன்ற சொகுசு கார்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!