தமிழக அரசியல் களத்தில் புதிய அலையை உருவாக்கியுள்ள நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உணர்ச்சிமிக்க வகையில் உரையாற்றினார். அந்த உரையின் போது அவர் கண்கலங்கிய தருணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், கட்சியின் எதிர்கால திட்டங்கள், தேர்தல் நடவடிக்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விஜய் விரிவாக பேசினார். குறிப்பாக, திமுக குறித்த அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், கூட்டத்தில் அவர் கூறிய சில வரிகள் அனைவரையும் உணர்ச்சிவசப்படச் செய்தன. விஜய் தனது உரையில், “இந்த தேர்தலை மக்கள் தவறவிடக்கூடாது. இந்த விஜய்யையும் தமிழ்நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது,” என்று கூறியிருந்தார்.
மேலும், “என் மேல் என்னென்ன அவதூறுகள் பரப்புகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். என் மீது அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது அவதூறு பரப்புவதை போன்றது. எனக்கு அரசியல் தெரியவில்லை என்று சொன்னால் அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வதைப் போன்றது. என்னை அசிங்க அசிங்கமாக பேசினால் அது மக்களை அசிங்க அசிங்கமாக பேசுவதைப் போன்றது,” என்று அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், “இந்த விஜயையும் மக்களையும் பிரிக்கவே முடியாது… அது சென்ஸிட்டிவான சென்டிமெண்ட்,” என்று கூறியபோது அவரது குரல் நடுங்கியது. சில நொடிகள் பேசாமல் நின்ற அவர், கண்கலங்கியதை கூட்டத்தில் இருந்தவர்கள் கவனித்தனர். இந்த தருணம் அங்கிருந்த தொண்டர்களை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.
Listen News!