தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ஹேமா சுதா. தற்போது சில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார்.
அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு திரையில் அம்மாவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஹேமா சுதா தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த சவால்கள் குறித்து சமீபத்தில் உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி ஒரு பேட்டியில் பேசிய ஹேமா சுதா, தனது வாழ்க்கையின் தொடக்க காலம் மிகவும் வசதியானதாக இருந்ததாக கூறினார். வீட்டில் பல உதவியாளர்கள் இருந்ததுடன், மூன்று கார்கள் மற்றும் தனி டிரைவர்களுடன் வசதியான வாழ்க்கை வாழ்ந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

ஆனால் தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக குடும்பத்தின் பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அந்த சமயத்தில் சொத்துகளை விற்கும் நிலை ஏற்பட்டதுடன், கல்வியை தொடர தாயின் நகை கூட அடகு வைக்கப்பட்டதாக அவர் உணர்ச்சியுடன் கூறினார்.
பின்னர் சினிமா வாயிலாக உயர்ந்த நிலைக்கு சென்றபோதும், வாழ்க்கையில் பல நிதி மற்றும் தனிப்பட்ட சிக்கல்களை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு தொழில் முயற்சியில் பெரும் முதலீடு செய்தபோது ஏற்பட்ட சட்ட சிக்கல் காரணமாக தனது முழு முதலீட்டையும் இழந்ததாகவும் அவர் கூறினார். குடும்ப வாழ்க்கையிலும் பிரிவு ஏற்பட்டதால் தற்போது தனியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
நடிப்பில் வெற்றிகரமான பயணம் இருந்தாலும், வாழ்க்கையில் சந்தித்த ஏற்றத் தாழ்வுகள் தன்னை பலமாக மாற்றியதாக நடிகை ஹேமா சுதா தெரிவித்துள்ளார்.
Listen News!